search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா வெள்ளம் நிவாரணம்"

    வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் எந்த மாநிலமாக இருக்கட்டும், பெரும் பேரிடர்களில் சிக்கி பரிதவிக்கும் நேரத்தில் மனித நேயத்தோடு செய்யும் உதவியை ஏற்பதில் தவறு இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். #KeralaFloodRelief
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில் ம.தி.மு.க. சார்பில் தொண்டரணி பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை கட்சியின் பொது செயலாளர் வைகோ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோட்டில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி ம.தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 100 தொண்டர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

    இம்மாநாடு ம.தி.மு.க.வின் வெள்ளிவிழா மாநாடாகவும், தந்தை பெரியார், அண்ணாவின் பிறந்த நாள் விழா மாநாடாகவும் நடக்கிறது. இதில் அனைத்து தோழமை கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில்லை என்ற நிலைப்பாடு எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வதில் தவறில்லை. அதே நேரத்தில் மனிதாபிமானத்தோடு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் எந்த மாநிலமாக இருக்கட்டும், பெரும் பேரிடர்களில் சிக்கி பரிதவிக்கும் நேரத்தில் மனித நேயத்தோடு செய்யும் உதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் மனிதாபிமானத்திற்கும், நாடுகளிடையே நட்புறவு மலர்வதற்கும் சரியானதாக இருக்கும். எனவே மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    தி.மு.க. தலைவராக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறார். அவருக்கு ம.தி.மு.க. சார்பில் மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தி.மு.க.வை வெற்றிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறேன்.

    தமிழக அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருவதால் முடங்கி கிடக்கிறது. மணல் கொள்ளையை தடுக்காததாலும், தடுப்பணைகளை முறையாக கட்டாததாலும், முக்கொம்பு, மேலணை போன்ற அணைகளை பராமரிக்காததாலும் தமிழகத்திற்கு பெரும் துயரமும், துன்பமும்தான் ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி, மாநில அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினர் செந்தில் அதிபன், மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ் உள்பட பலர் உடனிருந்தனர். #MDMK #Vaiko #KeralaFloodRelief
    ×